Blog
அழகு + ஆரோக்கியம்
எப்போது சந்தித்தாலும் அப்போதுதான் பூத்த ரோஜா போல ‘ஜில்’லென்று படு ஃப்ரெஷ்ஷாக இருப்பார் பிரபல ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜயபால். அது மட்டுமல்ல; உதடுகளில் உற்சாகமான புன்னகை; கனிவான பேச்சு; சுறுசுறுப்பான நடவடிக்கைகள் என்று அவரைப் பார்த்தாலே பாதி வியாதி பறந்துவிடும் என்பது நிஜம்.
‘‘அழகாகவும் அதே சமயம் ஆரோக்கியமாகவும் எப்படி டாக்டர் உங்களை இவ்வளவு பாந்தமாக வைத்துக்கொள்கிறீர்கள்? அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லுங்களேன்!’’ என்று கேட்டதுதான் தாமதம்... அனுபவ குறிப்புகள் மழை போல கொட்ட ஆரம்பித்தன அவரிடமிருந்து.
‘‘முதல் விஷயம்... ஓர் ஆயுர்வேத மருத்துவராக இருக்கிறதால எதையும் ‘வருமுன் காப்போம்’ என்பது என் மனசில் ஆழமாகப் பதிஞ்சு போயிருக்குன்னே சொல்லலாம். அதனால, ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற சில விஷயங்களை ரெகுலராக நான் பின்பற்றி வர்றதால், அது எனக்கு இளமையையும் உற்சாகத்தையும் கொடுக்குதுன்னு நான் நம்பறேன்.
* என்னுடைய காலைகள் எல்லாமே ‘ஆயில் புல்லிங்’கில்தான் தொடங்கும். ஆயுர்வேதத்தில் ‘ஆயில் புல்லிங்’ (வாயில் எண்ணெயை விட்டு கொப்புளித்தல்)என்பது ரொம்பவே சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கும் ஒரு விஷயம். ரெண்டு விஷயத்துக்காக இதை நீங்க தினமும் ரெகுலராக செய்து வரலாம். ஒண்ணு, வாயில் ஏற்படும் பாக்டீரியா தொற்றோ அல்லது ஈறுகளில் ஏற்படும் தொற்றோ... இல்லன்னா பல் கூச்சம், பல் சொத்தையாகுதல்... இப்படி எல்லாவற்றையும் தடுக்கிறதுக்கான சிறந்த வழி. ரெண்டாவது, இந்த மாதிரி ‘ஆயில் புல்லிங்’ செய்யும்போது, அண்னாந்து பார்த்து கொப்புளிப்பதால், நம்முடைய கன்னத்து தசைகளையும் தாடைகளையும் செயல்பட வைக்கிறோம். இதனால் அந்தத் தசைகள் இறுகி, நம்முடைய வயசே தெரியாது. பொதுவாக கன்னத்து தசைகள் தொங்கிப்போய், இரட்டை நாடி வரும்போதுதான் நமக்கு வயதாவதே தெரியும். ஆனால் தொடர்ந்து ‘ஆயில் புல்லிங்’ செய்வதால் இரட்டை நாடி வருவதையும் தடுக்கலாம். அதோடு, வாயில் துர்நாற்றம், வாய்ப்புண் போன்றவை வரவே வராது. மேலும் வாயில் எந்தவிதத் தொற்றும் அணுகாது. அதனால், தினமும் காலையில் முதல் வேலை அதுதான். நான் நல்லெண்ணெயை 10 மி.லி. எடுத்து ஆயில் புல்லிங் செய்வேன்.
அதோடு இன்னும் கொஞ்சம் எடுத்து முகத்தை மசாஜ் செய்றது என்னுடைய வழக்கம்.
கன்னத்து தசைகள் எல்லாமே வயதானால் ‘கொலாஜன்’ குறைந்து தொங்கிப் போக ஆரம்பிக்கும். நல்லெண்ணெயில் ‘கோயின்சைன் க்யூட்டைன்’ என்ற என்ஸைம் இருக்கிறதால, கொலாஜனைக் கட்டமைக்க ரொம்ப உபயோகமாக இருக்கும். நல்லெண்ணெயை வைத்து லேசாக முகத்தில் மேல்நோக்கி மசாஜ் செய்றது, கண்ணைச் சுத்தி வட்டமா மசாக் செய்றது.. இதெல்லாத்துக்குமே ரொம்ப நேரம் எடுக்காது. மூணு, நாலு நிமிஷம்தான் ஆகும். இது பண்றதால் ஸ்கின் டோன் ஆவதுடன், பிரகாசமாகவும் ஆகும். ஸோ, காலையில் முதல் வேலை இதுதான்.
* அதன் பிறகு, ஏழெட்டு பாதாம் பருப்புகளை ஊறவைத்து, தோலை நீக்கி சாப்பிடுறது என்னோட பழக்கம். பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட, ஊறவைத்துச் சாப்பிட்டால் முளைகட்டிய பயறைச் சாப்பிடுவதால் ஏற்படும் பலன் கிடைக்கும். அதுக்க்கப்புறம், 6 மணியிலிருந்து ஆறரை மணி வரையில் அந்த இளம் வெயிலில் உட்கார்றது எனக்கு ரொம்ப இஷ்டமான விஷயம். கணாவர் ஊரில் இருந்தால், கடற்கரையில் வாக்கிங் போவோம். அவர் இல்லாதபட்சத்தில், மொட்டை மாடியில் வெயிலில் உட்கார்ந்திடுவேன். இதை நான் செய்றேன் தெரியுமா? இந்தியா ஒரு வெயில் அடிக்கிற நாடு. இவ்வளாவு வெயில் இருந்தும், நிறைய பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்துகிட்டே இருக்கு! இதுக்கு காரணங்கள் ரெண்டு.. ஒண்ணு, சரியான அளவு கொழுப்பை உள்ளுக்கு சாப்பிடாதது. ரெண்டாவது, சரியான அளவு வெயில் உடலில் படாமல் இருத்தல். இது ரெண்டுக்காகவும்தான் நான் பாதாம் சாப்பிடறதும், வெயிலில் நிற்பதும்! பாதாமில் இருப்பது உடலுக்குத் தேவையான கொழுப்பு. அதே மாதிரி நான் உபயோகிக்கிற எண்ணெய்கள், செக்கில் ஆட்டப்பட்டவைதான். அதோடு பசு நெய், பாதாம் எல்லாம் சாப்பிட்டுட்டு, உடலை வெயிலுக்கு ‘எக்ஸ்போஸ்’ பண்ணினா, உடலுக்குத் தேவையான வைட்டமின் டியை உடலே தயாரித்துக் கொள்ளும். வைட்டமின் டி&க்காக மாத்திரையைத் தேடிப்போக வேண்டிய தேவையில்லை. ஆனால், வெயிலில் உட்கார்றதுன்னா, சூர்யோதயாமாகி ஒரு மணி நேரத்துக்குள் அல்லது சூர்ய அஸ்தமனமாவதற்கு முன் ஒரு மணி நேரத்துக்குள் இருக்கணும். அதுதான், சரியான நேரத்தில் அடிக்கும் உங்க உடலுக்குத் தேவையான வெயில்!
‘ஆத்ப சேவனம்’ என்பது ஆயுர்வேதத்தில் ரொம்ப விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கு. வெயிலில் உட்கார உட்கார, உடலில் தசைகள் எல்லாம் ‘ரிலாக்ஸ்’ ஆகி, வியர்வை உண்டாவது ரொம்ப முக்கியமான விஷயம். வியர்வை உண்டாவதால் தோல் ஈரப்பதத்தோடு, சருமம் எப்போதும் இளமையாகவே இருக்கும்.
* இதை முடித்த அரை மணி நேரத்தில், கொத்தமல்லி ஜூஸ் குடிப்பது என் நீண்டகால வாடிக்கை. ரொம்ப எளிமையான விஷயம். ஒரு கைப்பிடி பச்சை கொத்தமல்லித்தழையை எடுத்து, எல்லா அலசிட்டு, அதை அரைச்சு சாறெடுத்து, தினமும் ஒரு 15 மி.லி. அளவுக்கு வெறும் வயிற்றில் குடிப்பேன். கொத்தமல்லியின் அருமையான குணம் என்ன தெரியுமா? உடலில் இருக்கிற தேவையற்ற தாது கழிவுகளை எல்லாம் கிரகித்து, வெளியேத்திடும் சக்தி அதுக்கு உண்டு. பித்தத்தை சீர் செய்யும் குணமும் கொத்தமல்லிக்கு உண்டு. பலபேருக்கு வேளியில் ஹோட்டலில் சாப்பிட்டே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கு. அங்கே விதம்விதமான எண்ணெய்கள், கண்ட கண்ட மசாலா பொடிகள் எல்லாம் உபயோகிப்பாங்க. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் எல்லாம் வந்துடும். கொத்தமல்லி ஜூஸ் சாப்பிட்டு வந்தால், இயற்கையாகவே அந்தப் புண்ணை ஆத்தும் சக்தி அதுக்கு இருப்பதால், புண்கள் ஆறிடும். உடலில் இருக்கும் உஷ்ணத்தைத் தணிக்கும். பலருக்கு உடல் உஷ்ணத்தினால் முடி கொட்டுதல், தூக்கம் வராதிருத்தல், தூங்கினாலும் கண் எரிச்சல் இப்படி பல பிரச்னைகள் இருக்கும். எனக்கு பித்த உடம்பு என்பதால், இந்த கொத்தமல்லி ரசம் ரொம்பவே பயனுள்ளதாக இருக்கு. நாம் சாப்பிடுற காய்கறி, பழங்கள் மத்த உணவுகளினால் உடலில் சேரும் தாது கழிவுகளை கொத்தமல்லி வெளியேத்திடறதால, உடல் எப்போதும் ஃப்ரெஷ்ஷாகவும் பொலிவாகவும் இருக்கும்.
* காலை உணவு எப்போதுமே நல்ல, திடமான, பலமுள்ள ஆகாரமாகத்தான் சமைக்கிறேன். சமையல் எப்போதுமே என்னுடையதுதான். அரிசி மட்டுமேயில்லாமல், வரகு, தினை, சாமி, குதிரைவாலி எல்லாத்தையுமே சமையலில் உபயோகிப்பதுண்டு. டிபன் முடிச்சிட்டு, காபி, டீ குடிக்கிறதில்லை. அதுக்கு பதிலாக தண்ணீர், மோர் சேர்த்துக்கிறது என்னுடைய வழக்கம். ஒரு நாளைக்கு 4 முதல் 5 டம்ளர் நீர்மோர் குடிக்கக் குடிக்க உடலுக்குத் தேவையான கால்சியம் சத்தெல்லாம் அதன் மூலமாகவே கிடைச்சிடும். கால்சியம் மாத்திரைகள் தேவையில்லை. நம்முடைய தென்னிந்திய காலை உணவுதான் மிகச் சிறந்த காலை உணவு! உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் அது கொடுப்பதால், அதை ஒரு சமச்சீரான உணவுன்னு சொல்லலாம். அதில் கவனிக்கவேண்டிய ஒண்னு என்னன்னா, பொங்கல் செய்யும்போது தீட்டப்பட்ட அரிசியை உபயோகிக்காமல் வரகரிசி பொங்கல் அல்லது தினையில் இட்லி, கேழ்வரகு மாவில் இட்லி என்று மாத்தி மாத்தி செய்வேன். கார்ன்ஃப்ளேக்ஸ் என் சமையலில் இடம்பெறுவதில்லை. சோயா சங்க்ஸ், மீல் மேக்கர் இதெல்லாம் நான் சமையலில் சேர்ப்பதில்லை. அதெல்லாம் நம் உடலுக்கு ஒத்துவராது என்பது என் எண்ணம்.
* ‘என்னால் இன்னும் ஒரு பிடி சாப்பிட முடியும்’ என்கிற நிலை வரும்போதே சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன். அதுதான் ‘சரியான உண்னும் முறை’ கூட! சாப்பாடு என்பது அவரவர் பசியைப் பொறுத்ததே அல்லாமல் கேலரிகளைப் பொறுத்ததில்லை. ‘பசியைப் பொறுத்துத்தான் சாப்பிட வேண்டும்’ என்பது ஆயுர்வேதத்தின் அடிப்படை விதிகளுள் ஒன்று. என்னால் 5 இட்லி சாப்பிட முடியும் என்றால், நான் 4 இட்லிதான் சாப்பிடுவேன். சாப்பாட்டுக்கு நடுவே அவ்வப்போது தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக் குடிப்பது எனக்கு ரொம்பப் பிடித்தமான ஒன்று. அது ஜீரணத்தை மேம்படுத்தும். வெறும் தண்ணீராக இல்லாமல் சீரகத் தண்ணீர் அல்லது சுக்கு தட்டிப் போட்ட தண்ணீர் அல்லது ஓமம் தட்டிப் போட்ட தண்ணீர் என்று மாத்திக்கொள்வேன். தண்ணீரை அப்படியே குடிப்பது என்பதை விட, நாலு இட்லிகளைச் சாப்பிடும்போது அரை டம்ளர் தண்ணீரை இடையிடையே உறிஞ்சிக் குடித்தால் ஜீரணம் மேம்படும். ‘இன்னும் ஒரு இட்லி சாப்பிடமுடியும்’ எனும்போதே, எழுந்துவிட்டால், உங்க வயிற்றில் காலி இடம் கிடைக்கும். சாப்பாடு சாப்பிடும் முறை பற்றி ஆயுர்வேதத்தில், ‘உங்க உடலில் ரெண்டு பங்கு உணவாகவும், ஒரு பங்கு தண்ணீருக்கும், ஒரு பங்கு காற்றுக்கும் விடவேண்டும்’ என்று ஒரு குறிப்பு இருக்கு. இதனால் ஜீரணம் நன்றாக ஆவதால், வயிற்றில் வாய்வு சேர்ந்துகொள்ளுதல், வயிறு கனமாகுதல் போன்ற எந்த பிரச்னைகளும் உண்டாவதில்லை.
* முற்பகல் 11 மணி.. வழக்கமாக நான் கிளினிக்கில் பேஷன்ட்ஸ் பார்க்கும் நேரம். அந்த நேரத்தில் ஒரு இளநீர் குடிப்பேன். அது இல்லையென்றால் நீர் மோர் அல்லது பால் சேர்த்த சுக்கு காபி சாப்பிடப் பிடிக்கும். பலர் கிரீன் டீ சாப்பிடறாங்க. நான் அதைக் குடிக்கிறதில்லை. கிரீன் டீ வேண்டும் என்பவர்கள், ஒரு நாளைக்கு ஒரு கப் வேண்டுமானால் குடிக்கலாம். கிரீன் டீ அதிகமாக சாப்பிட்டால், அது தேவையில்லாத மலச்சிக்கல் பிரச்னையில் கொண்டுபோய் விடும்.
* மதிய உணவு ரொம்ப அளவானதுன்னுதான் சொல்லணும். ஏன்னா, கிளினிக்லயே தொடர்ந்து இருப்பதால், லன்ச் பேக் பண்ணி எடுத்துட்டுப் போயிடுவோம். நான் சைவம் என்பதால், சாதம், ஒரு குழம்பு, ரசம், பொரியல்... இப்படித்தான் மதிய உணவு இருக்கும். என் சமையலில் கண்டிப்பாக பருப்பு இருக்கும். மாடர்ன் டயட்டீஷியன்ஸ் கூட, ‘உடல் எடைக்கு ஏத்த மாதிரி அளவுகளில் பருப்பை எடுத்துக்கணும்’னு ஒரு ‘டயட்’ விதி சொல்வாங்க. அதுக்கேத்த மாதிரிதான் நான் என் உணவுகளில் பருப்பை சேர்த்துக்கிறேன். அது வெறும் பருப்பாகவோ, அல்லது ஒரு கூட்டாகவோ அல்லது பொட்டுக்கடலை, வேர்க்கடலை உருண்டையாகவோ.. ஏதோ ஒரு விதத்தில் அந்த அளவு பருப்பு இருக்கிறதால அனாவசியமாக தசை வலி போன்ற பிரச்னைகள் எல்லாம் வர்றது இல்லை. சின்னச் சின்ன விஷயங்களுக்கும் களைப்படையறது கிடையாது.
* ‘பவர் நேப்’ (றிஷீஷ்மீக்ஷீ ஸீணீஜீ) என்பது இன்னொரு அருமையான கான்செப்ட். அதாவது உட்கார்ந்துகிட்டே குட்டி தூக்கம் போடுதல். அதனால் தேவையில்லாத எந்த தோஷங்களும் அதிகரிப்பதில்லை என்கிறது ஆயுர்வேதம். ஸோ, ஒரு அரை மணி நேரம் ‘பவர் நேப்’ எடுப்பதால எனக்குத் தேவையான சக்தியையும் மாலையில் நோயாளிகளைப் பார்க்கும்போது தெளிவாகச் சிந்திக்கும் ஒருமுகப்பட்ட மனநிலையையும் அது கொடுக்கிறது. எல்லாருக்குமே நான் இதை சிபாரிசு செய்வேன். ஆனா, சாப்பிட்ட உடனே கவிழ்ந்து படுத்துத் தூங்காமல், சாப்பிட்டு ஒரு அரை மணி நேரம் கழித்து, கொஞ்ச நேரம் ஓய்வாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்து சாய்ந்து, கால்களை நீட்டியபடி கண்களை மூடியபடி ‘பவர் நேப்’ எடுப்பது ரொம்பவே நன்மை தரும் விஷயம்.
* மாலை நேரத்தில், என்னுடைய சாய்ஸ் ஃபில்டர் காபி. இன்ஸ்டன்ட் காபித்தூளுக்கு பதிலாக, ஃபில்டர் உபயோகித்தால், உடலில் சர்கக்ரை அளவுகளைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். கூடிய வரையில் காபிக்கு வெள்ளை சீனியைத் தவிர்த்து, வெல்லத்தூள் அல்லது பழுப்பு சர்க்கரையைத்தான் (ஙிக்ஷீஷீஷ்ஸீ suரீணீக்ஷீ) உபயோகப்படுத்துறேன். அதேபோல, சமையலுக்கு ரைஸ் குக்கர், எலெக்ட்ரானிக் குக்கர் எல்லாம் பயன்படுத்துவது கிடையாது. ‘டயட் குக்கர்’ தான் எங்கள் வீட்டில்! அதில் தேவையில்லாத கஞ்சி அடியில் தங்கிவிடும் என்பதால், அதிகப்படியான தேவையற்ற ஸ்டார்ச் உடலுக்குள் போவதில்லை.
* என்னுடைய இரவு உணவு, வழக்கமா ரொம்ப சீக்கிரமாகவே இரவு ஏழு, ஏழரைக்கெல்லாம் முடிஞ்சிடும். சீக்கிரமாகச் சாப்பிடப்படும் இரவு உணவு, ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை விஷயங்களில் ஒண்ணு. சைவ சாப்பாடு என்பதால், ரொம்ப எளிமையான உணவாகத்தான் இரவில் இருக்கும். அதுவும் எண்ணெய் இல்லாமல்தான் இருக்கும். அரிசி உணவு ஒரு வேளைதான். காலையில் இட்லி அல்லது தோசையோ, இல்லை மதியம் சாதமோ மட்டும்தான். காலையில் கோதுமை அல்லது கேழ்வரகில் ஏதேனும் டிபன் செய்திருந்தால், இரவில் வரகு, சாமையை வைத்து ஏதேனும் செய்வேன். மதியம் மட்டுமே அரிசி, ஒருவேளை கோதுமை, மறுவேளைக்கு சிறுதானியம் என்று பயன்படுத்துவதால் தேவையற்ற ஊளைச்சதை உடலில் சேர்வது தவிர்க்கப்படுது. 7 மணிக்கு டின்னர் முடிச்சிட்டா, 8.30 & 9 மணியளவில் ஒரு கைப்பிடி ஏதேனும் பழங்கள் சாப்பிடுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். பழங்கள் என்றாலே சத்துக்கள் நிரம்பியவைதானே! அந்தந்த சீஸனில் கிடைக்கும் பழங்களைச் சாப்பிட்டால் அவை நம்ம ஆரோக்கியத்தை நல்லா மேம்படுத்தும். எனவே சீஸனல் ஃப்ரூட்ஸ்தான் என்னோட சாய்ஸ். ஸ்ட்ராபெர்ரி, லிச்சி மாதிரி நமக்குத் தெரியாத/தேவையில்லாத பழங்கள் எல்லாம் சாப்பிடுறது கிடையாது. நமக்குத் தெரிந்த, நம் ஊரில் விளையும் கொய்யா, பப்பாளி, தர்பூசணி, நுங்கு & இப்படி அந்தந்தக் காலங்களில் என்ன கிடைக்குதோ அதைத்தான் எடுத்துக்குவேன். பலர், ‘‘எனக்கு பழங்கள் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும்’’ என்பதூண்டு. அந்தப் பிரச்னை பழங்களில் இல்லை. அதை நீங்கள் சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதில்தான் பிரச்னையே. எனக்குத் தெரிந்து நிறைய பேர் இரவு உணவுடன் சேர்த்து பழங்கள் சாப்பிடுவதுண்டு. தயிர் சாதத்துடன் வாழைப்பழம் சாப்பிடுவார்கள். அது அஜீரணத்துக்கு வழிவகுக்கும். அது ரெண்டுமே செரிக்கக் கடினமான உணவு. அது செரிமான வழிகளை அடைத்துக்கொள்வதால், அஜீரணக் கோளாறு ஏற்படும். எனவே பழங்களை தனியாகத்தான் சாப்பிடணும். சொல்லப்போனா, வயிறு பாதி காலியாக இருக்கப்போ சாப்பிட்டால், இன்னும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
* இரவு 10 மணிக்கு ஒரு டம்ளர் பால் சாப்பிடுவேன். அதில் வெல்லத்தூள் அல்லது பனங்கல்கண்டு அல்லது ஏலக்காய்தூள் போட்டுச் சாப்பிடுவதுண்டு. இரவில் இஞ்சிப் பால், சுக்குக்காபி, லவங்கப் பட்டை தூள் சேர்த்த பால் போன்றவை சாப்பிட்டால் தூக்கம் வராமல் போனாலும் போகலாம். கூடியவரை இரவில் சுகமான தூக்கம் வேண்டுமென்றால், பனங்கல்கண்டு சேர்த்த பால் சாப்பிடலாம். அது உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதால், தொந்தரவில்லாத சுகமான தூக்கம் உங்களைத் தழுவும்.
* இரவு படுக்கப்போகுமுன் நான் செய்யும் இன்னொரு முக்கியமான விஷயம், கால்களுக்கு தேங்காய் எண்ணெய் தடவுதல். இதனால், பாதங்களில் இருக்கும் சின்னச் சின்ன வெடிப்பு போன்றவை மறைஞ்சு, பட்டுப் போல பாதம் இருக்கும். வாரத்துக்கொரு முறை எண்னெய் தேய்த்துக் குளிப்பதும் நான் கண்டிப்பாகச் செய்யும் விஷயம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் ஸ்கின் டோன் பிரகாசமாக இருக்கறதோட, தோலில் சுருக்கம் விழாமலும் இருக்கும். இதில் ஏதாவது சில விஷயங்களை நீங்க 30 வயதில் ஆரம்பித்தால் கூட, 50 வயதில் இளமையாகத் தெரிவீங்க! எனக்கு வயது இப்போ ஐம்பது!’’ & அர்த்தபுஷ்டியுடன் அரோக்கியப் புன்னகை சிந்துகிறார் சாக்டர் சாந்தி.
பாக்ஸ் மேட்டர்:
வாரத்துக்கு ஒரு முறை ‘ஹேர் பேக்’ போடுவது எனக்கு ரொம்பப் பிடித்தமான ஒன்று. இயற்கையாகவே எனக்கு இருப்பது, பட்டுப் போல மென்மையான கூந்தல். எனக்கு ஜலதோஷம் அதிகமாகப் பிடிக்காது என்பதால், என்னுடைய ஹேர் பேக்கை தயிர் சேர்த்து நானே தயரிச்சுக்குவேன். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை முட்டை சேர்த்து ஹேர் பேக் போடலாம். முட்டையின் மஞ்சள் கரு நாறும் என்பதால் வெள்ளைக்கருவை மட்டும் பேக் போடுறாங்க. ஆனா, முட்டையின் முழு சத்தும் பலனும் கிடைக்கணும்னா முழு முட்டையையும் அடிச்சு பேக் போடறதுதான் சிறந்தது. அப்படி இது ரெண்டும் இல்லை என்றாலும், உஷ்ண உடம்புகாரர்கள் செம்பருத்திப் பூவின் இலை மற்றும் பூவைப் போட்டு அரைத்து பேக் போடலாம். ஹேர்பேக் போட்டு ஊறவைத்த பின், அலசிக் குளித்தால் முடி நல்ல பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்